விளம்பரங்கள் : Buy tamil books online
டாக்டர் எம்.ஜி.ஆர்

தோற்றம் -17-1-1917
மறைவு -24-12-1987தமது ஏழாவது வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு எத்தனையோ அல்லல்களுக்கிடையே ஒரு சிறந்த நாடறிந்த நடிகராகப் புகழ் பெற்றவர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள். சுமார் 150 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த அவர் தமது லட்சியங்களையும் கொள்கைகளையும் அவற்றின் வாயிலாக வெளிப்படுத்தி, மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று 'மக்கள் திலகம்' என்றும் புரட்சி நடிகர்' என்றும் போற்றப் பெற்றவர். புரட்சி நடிகராகப் புகழ்பற்ற அவர் பின்னர் புரட்சித்தலைவராக உருவெடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1977-ஆம் ஆண்டு முதல் 1987 டிசம்பர் திங்கள் 24ஆம் நாள் வரை பணியாற்றியவர். முதலமைச்சராக இருந்தபோது ஏழை மக்களின் பசிக்கொடுமையையும் வேலை இல்லாத திண்டாட்டத்தையும் போக்கிட தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். விவசாயிகளுக்கு வழங்கும் மின் கட்டணத்தைக் குறைத்து, கூட்டுறவு வங்கிகள் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் கடனை விரிவுபடுத்தி, விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து சட்டம் நிறைவேற்றி வேளாண் உற்பத்தியை பெருக்கியவர். தொழில் கல்வி பெருகிட 'அண்ணா பல்கலைக்கழகம்', பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் சத்துணவுத் திட்டம்,சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டுவரும் திட்டம், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தனியாகத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மகளிருக்காக்க் கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக்கழகம். தந்தை பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்த முறையை நடைமுறைப்படுத்தியது. ஆஸ்தான கவிஞராக கவியரசு கண்ணதாசனை நியமித்தது, போன்ற சாதனைகள் புரிந்து புகழின் உச்சியை எட்டியவர் எம்.ஜி.ஆர். நின்றால் 'பொதுக்கூட்டம்' நடந்தால் 'ஊர்வலம்' என்று பத்திரகைகளால் பாராட்டப் பெற்ற அவர் இந்தியாவின் தலை சிறந்த விருதான 'பாரத ரத்னா' விருது பெற்றவர். அவரின் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அவரது நினைவிடமாகப் போற்றி பராமரிக்கப்பட்டு வருகின்றது.