திண்டுக்கல் தேர்தலில் சாதனை படைத்த சரித்திர நாயகராம் எம்.ஜி.ஆருக்குப் புரட்சிப் பூமியாம் சோவியத் யூனியனுக்குச் செல்லும் வாய்ப்பு ஒன்று அதே ஆண்டில் வாய்த்தது.

மாஸ்கோவில் எட்டாவது சர்வதேசப் பட விழா நடைபெறவிருந்தது. அதில் கலந்துகொள்ளும்படி சோவியத் அரசு புரட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட புரட்சித் தலைவர், 1973 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதியன்று சோவியத் யூனியனுமக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மாஸ்கோ நகரில், புகழ் பெற்ற ‘ருஷ்யா’ என்னும் உணவு விடுதியில் புரட்சித் தலைவருக்கு வசதியான ஓர் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புரட்சித் தலைவரோடு இயக்குனர் ப. நீலகண்டன், சித்ரா கிருஷ்ணசாமி, ஆகியோரும் சோவியத் யூனியனுக்குச் சென்றிருந்தனர்.

மனத்தைக்கவர்ந்த மாஸ்கோ நகரம்

மாஸ்கோ நகரின் சுத்தமான சாலைகளும், பசுமை படர்ந்த சுற்றுச் சூழலும் புரட்சித் தலைவரை வெகுவாக்க் கவர்ந்தன. அவற்றைவிட ரஷ்யக் குழந்தைகளின் ஆரோக்கியமான, ‘கொழு கொழு’ வென்றிருந்த வளமான தோற்றம் அவர் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டது. குழந்தைகளை எங்கே கண்டாலும் அவர்களோடு நின்று படம் பிடித்துக் கொள்வதிலும், அவர்கள் கன்னத்தைத் தடவி விட்டுக் கொஞ்சுவதிலும், அவர்கள் கன்னத்தைத் தடவிவிட்டுக் கொளவதிலும் அவர் மகிழ்ச்சி கொண்டார்.

சோவியத் நாட்டைப் பற்றியும், தொழிலாளர்களின் சம்பள விகிதங்கள், வாழ்கை நிலவரம், குடும்பச் சூழ்நிலை முதலியவற்றைப்பற்றியும் அறிந்துகொள்வதில் அவர் காட்டிய ஆர்வம் சோவியத் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது.

குறிப்பெழுதிக் கொள்வார்!

புரட்சித் தலைவர்,தாம் போகும் இடங்களுக்கெல்லாம் ஒரு குறிப்புப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு சென்றார். தாம் கேள்விப்படும் புதிய தகவல்களையெல்லாம் ஒரு பள்ளிமாணவனைப்போல அதில் குறித்துக் கொண்டார்.

ஒருநாள், புரட்சித் தலைவரும் வேறு சிலரும் ருஷ்யா ஓட்டல் லிப்டில் ஏறி நின்றனர். அப்பொழுது சற்றுத் தூரத்தில் ஒருவர் ஓடிவந்தார். அவரைப் பார்த்த புரட்சித் தலைவர் லிப்ட் இயக்குபவரை நோக்கி ‘சற்றுத் தாமதியுங்கள்’ என்று ஆங்கிலத்தில் கூறினார். லிப்ட் இயக்குபவர் ஆங்கிலம் அறியாதவராதலால் அவர் விழித்தார்.

உடனே புரட்சித் தலைவர், ரஷ்யாவில் தமக்கு மொழிப் பெயர்ப்பாளராகப் பணியாற்றிய மாஸ்கோ லுமும்பா பல்கலைக் கழக மாணவியான வி.எஸ். கமலாவிடம், சற்றுத் தாமதியுங்கள் என்னும் வார்த்தைக்கு ருஷ்ய மொழியில் எவ்வாறு கூறுவது என்று கேட்டார். ”பதழ்ஜிச்சி நிமனோஷ்கா’ என்று கூறினார் கமலா. உடனே புரட்சித் தலைவர் அதைத் தம்முடைய குறிப்பு புத்தகத்தில் தமிழிலேயே எழுதி வைத்துக் கொண்டு, பலமுறை உச்சரித்து மனதில் பதித்துக் கொண்டார்; பின்னர்த் தேவைப்பட்டபோதெல்லாம், மிகவும் சரளமாக அந்த ரஷ்ய வார்த்தைகளையே பயன்படுத்தி ரஷ்ய மக்களை வியப்பிலாழ்த்தினார்.

ரஷ்யர் பலர் புரட்சித் தலைவரின் கவர்ச்சியான முகத்தையும் காந்தக் கண்களையும் பொன் மேனியையும் கண்டு மயங்கி, அவரோடு நிழற்படம் பிடித்துகொள்ள விரும்பினார்கள். அவரும் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டார்.

எட்டாவது சர்வதேசப் பட விழாவில் திரையிட்டுக் காட்டப்பட்ட இந்தியப் படங்களைச் சோவியத் மக்கள் எப்படி இரசிக்கிறார்கள் என்பதைப் புரட்சித் தலைவர் மிகவும் கூர்ந்து கவனித்தார்.

படவிழா முடிவில் பேசிய இந்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஐ.கே. குஜரால், சர்வதேசப் படவிழாப் பிரதிநிதிகள் அனைவருக்கும் புரட்சித் தலைவரை அறிமுகப்படுத்தினார்; மேலும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எம்.ஜி. ஆருக்குள்ள அபரிதமான செல்வாக்கைப் பற்றியும், அவருடைய படங்கள் பெற்று வரும் மகத்தான வெற்றியைப்பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

மாஸ்கோ பட விழா முடிந்ததும் புரட்சித் தலைவரின் குழு, லெனின்கிராடு நகருக்குச் சென்றது. லெனின்கிராடு மாஸ்கோவைவிட மேலும் அழகான நகரமாகும்.

வீர வணக்கம் செலுத்தினார்!

இரண்டாம் உலகப்போரின்போது இட்லரின் நாஜிப் படைகள் லெனின்கிராடு நகரத்தை மூன்றாண்டுகளுக்கும் மேல் (1000நாள்கள்) முற்றுகையிட்டது. ஆயினும் அந்த நகரத்தை அவற்றால் கைப்பற்றமுடியவில்லை. 10 இலட்சம் பேரைப் பலிகொடுத்து நாஜிப்படையை வென்று புறம் க்ண்ட வீரத் திருநகரம், லெனின்கிராட். அந்த நகரத்திற்கு வெளியே போரில் மாண்ட 10 இலட்சம் மக்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் பிஸ்கரேவ் கல்லறை என்னும் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்திருக்கிறார்கள்.

புரட்சித் தலைவர் முதலில் மேற்சொன்ன கல்லறைக்குச் சென்று தம் இதய அஞ்சலியைச் செலுத்தினார்.

லெனின்கிராட் நகரத்தில் ஸ்மோல்னி மாளிகை உள்ளது. அதில், ரஷ்யப்புரட்சியின்போது புரட்சித் தலைவர் லெனின் வாழ்ந்தார். அம்மாளிகையில் மாமேதை லெனின் வாழ்ந்த அறைகளையும், அவர் பயன்படுத்திய பொருள்களையும் பயபக்தியோடு பார்த்தார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ரஷ்யப் புரட்சிக் காலத்தில் புரட்சித்தலைவர் லெனின் எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் விவிரமாய்க் கேட்டு அறிந்து கொண்டார் தமிழகத்தின் புரட்சித்தலைவரான எம்.ஜி.ஆர். அடுத்து, ஜார் மன்னர்கள் கோடைக்காலத்தில் தங்கியிருந்த பெட்ரோட் வோரட்ஸ்’ என்னும் இடத்தையும், ஹெர்மிடாஷ் என்னும் அரண்மனையையும் சுற்றிப் பார்த்தார் புரட்சித்தலைவர்.

லெனின் கிராடு நகரிலிருந்து புறப்பட்ட புரட்சித் தலைவர், பாரிஸ், லண்டன் முதலிய ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கும் சென்று சுற்றுப்பயணம் செய்தார்; இறுதியாக, அவர், நைரோபி நகர் வழியாக 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தாயகம் திரும்பினார்.

அதே 1973 ஆம் ஆண்டு அக்டோபரில், மாஸ்கோவில் உலக சமாதானக் கழக மாநாடு நிகழவிருந்தது. அதில் கலந்துகொள்ளும்படியும் புரட்சித்தலைவருக்கு அழைப்பு வந்தது. ஆனால், புரட்சித் தலைவர் அந்த மாநாட்டுக்குத் தம் பிரதிநிதியாக அமைப்புச் செயாலாளர் கே.ஏ.கே., எஸ்.டி.எஸ். ஆகியோரை அனுப்பி வைத்தார்.

மற்றொரு சோசலிச நாடான ஜெர்மன் ஜனநாயக்க் குடியரசின் (கிழக்கு ஜெர்மனி) தலை நகர் பெர்லின் ஆகும். அங்கு, 1973 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்த உலக இளைஞர் விழாவில் கலந்து கொள்ளுமாறும் புரட்சித் தலைவருக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவுக்குத் தம் கழகத் தோழருள் ஒருவரான கா. காளிமுத்துவை அனுப்பி வைத்தார், புரட்சித்தலைவர்.

இவ்வாறு புரட்சித் தலைவர் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு முன்பாகவே அயல்நாடுகள் பலவற்றுக்கு விஜயம் செய்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூதுவர்களாகத் தம் தம்பியர் சிலரை அனுப்பியும், கழகத்தின் பெயரையும் புகழையும் உலகறியச் செய்தார்.!

அண்ணாயிஸம் பிரகடனம்

1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோவியத் யூனியனுக்குப் போய்விட்டுத் திரும்பிய புரட்சித்தலைவர், ரஷ்யாப் புரட்சிக்கு வித்திட்ட கம்யூனிசக் கொள்கையைப் பற்றி மிகவும் தீவிரமாய்ச் சிந்தித்தார்.

அண்ணாவின் பெயரால் தாம் இயக்கம் தொடங்கியிருப்பது போலக் கட்சியின் கொள்கைக்கும் ஒரு பெயர் சூட்டவேண்டும்; அதிலும் அண்ணாவின் நாமம் பொதிந்திருக்கவேண்டும் என்று புரட்சித் தலைவர் எண்ணினார். இரவும் பகலும் அதைப்பற்றிச் சிந்தித்து ஒரு பெயரை உருவாக்கினார்.

அதுதான் ‘அண்ணாயிஸம்’!

தம் கட்சிக் கொள்கைக்கு இரத்தின சுருக்கமான அண்ணாயிஸம் என்னும் பெயரைச் சூட்டிய புரட்சித் தலைவர், அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க விரும்பினார்.

1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று, இரவு, எம்.ஜி.ஆர், யு.என்.ஐ மற்றும் பி.டி.ஐ. என்னும் இரண்டு செய்தி நிறுவனங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ”ஒரு நிருபரை அனுப்பிவையுங்கள்” என்று கூறினார். அப்பொழுது இரவு 8 மணிக்கு மேல் இருக்கும். என்றாலும் புரட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று செய்தி நிறுவனங்களும் த்ததமது நிருபர்களை அனுப்பிவைத்தன.

நிருபர்கள் வந்ததும் புரட்சித் தலைவர், ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ‘அண்ணாயிஸம்’ ஆகும். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள்’ என்றார்.

திடீரென்று தொலைபேசியில் அழைத்து, ஒரு வரியில் செய்தி சொல்கிறாரே என்று, அந்த நிருபர்கள் இருவரும் திகைத்தார்கள்.

அவர்கள் திகைப்பைக் கண்ட புரட்சித் தலைவர், ”ஏன் திகைக்கிறீர்கள்? காந்தியிசம், கம்யூனிசம், மாவோயிசம், மார்க்ஸிசம் என்றெல்லாம் கொள்கைகள் இல்லையா? அவற்றைப் போன்றதுதான் அண்ணாயிஸமும்!” என்றார். புரட்சித் தலைவர்.

மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி இடம் பெற்றது.

உடனே பத்திரிகையாளர்கள் பலர் புரட்சித் தலைவரின் தியாகராயநகர் அலுவலகத்துக்குப் படையெடுத்துச் சென்றனர்.

”அண்ணா தி.மு.க வின் கொள்கை அண்ணாயிஸம் என்று கூறியிருக்கிறீர்களே, அண்ணாயிஸம் என்றால் என்ன? என்று கேட்டனர்.

அதற்கு புரட்சித் தலைவர் அளித்த பதிலும் சுருக்கமானதுதான்.

”காந்தியிஸம், கம்யூனிஸம், கேப்பிட்டலிஸம் எனப்படும் முதாலாளித்துவம் ஆகிய மூன்று கொள்கைத் த்த்துவங்களிலும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் திரட்டினால் என்ன கிட்டுமோ அதுதான் அண்ணாயிஸம்!” என்றார் புரட்சித் தலைவர்.

எம்.ஜி.ஆரின் அண்ணாயிஸ விளக்கத்தைச் சிலர் பாராட்டினார்கள்; சிலர் புரியவில்லை என்றனர்; சிலர் குறை கூறினர். ஆனால், தமிழ்நாட்டு மக்களோ, எம்.ஜி.ஆரின் அண்ணாயிஸத்தின் அடிப்படை என்று தங்களுக்குத் தாங்களே ஒரு விளக்கத்தை கூறிக்கொண்டு அதை ஏற்றுக்கொண்டனர்.

சிலை வைத்துச் சிறப்பித்தார்.!

அதே 1973 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர் இன்னும் இரு முக்கியமான காரியங்களைச் செய்தார். திராவிட இயக்கச் சிற்பிகளான அறிஞர் அண்ணாவுக்கும், தந்தை பெரியாருக்கும் அண்ணா சாலையில் கால காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வண்ணம் இரு சிலைகளைச் செய்தமைத்தார்.

முதலில் பேரறிஞர் அண்ணாவுக்கு, அண்ணாசாலையும் வாலாஜா சாலையும் சந்திக்கும், அரசினர் தோட்ட சந்திப்பு முனையில், ஒரு விரலைக் காட்டி நிற்கும் ஆளுயர அண்ணா சிலையை நிறுவினார். அந்தச் சிலையைப் புரட்சித் தலைவர் தம் சொந்தச் செலவிலேயே நிறுவினார். கலவி மேதை டாக்டர் ஏ.இராமசாமி முதலியாரைக் கொண்டு அந்த அண்ணாவின் சிலையைத் திறந்து வைக்கச் செய்தார்.

பெரியாருக்குச் சிலை

அதே 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று அதே அண்ணா சாலையில், இந்து நாளேடு அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சாலைச் சந்திப்பில், தந்தை பெரியாருக்கும் பிரும்மாண்டமான சிலை ஒன்றை நிறுவித் திறந்து வைத்தார். இதற்கான அனுமதியைத் தந்தை பெரியாரிடமே பெற்றார், புரட்சித் தலைவர்!

திருவான்மியூர் மாநாடு

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5,6 ஆகிய தேதிகளில், சென்னை திருவான்மியூரில், பிரும்மாண்டமான ஒரு மாநாட்டை நடத்தினார். புரட்சித் தலைவர். அதற்கு முன்னர் ஜனவரி 4 ஆம் தேதியன்று, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுகூட்டம் சென்னையில் கூடியது. அந்தக் கூட்டத்தில் கழகத்தின் பொதுச் செயலாளராகப் புரட்சித் தலைவரை ஏக மனதாகத் தேர்ந்தேடுத்தனர்.

மேற்குறித்த அந்த மாநாடு, தென் சென்னை மாவட்ட அண்ணா தி.மு.க. தேர்தல் நிதி திரட்டும் மாநாடு ஆகும்.

அதே ஆண்டு பிப்ரவரியில் பாண்டிச்சேரி மாநிலச் சட்டசபைத் தேர்தலும், கோவை, பாண்டி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நிகழவிவருந்தன. அந்தத் தேர்தல்களுக்கு நிதி திரட்டுவதற்காகவே திருவான்மியூர் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்தார், புரட்சித் தலைவர்.

திருவான்மியூர் பெரியார் நகரில் நடந்த அந்த மாநாட்டில், கழகத்திற்கு 15 செயாலாளர்களை நியமித்திருப்பதாக அறிவித்தார், புரட்சித் தலைவர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவராகப் பாவலர் முத்துச்சாமியும், பொதுச் செயலாளராகப் புரட்சித் தலைவரும் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களைத் தவிர பொதுச் செயலாளர் நியமித்த 15 செயலாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் வருமாறு;

அமைப்புச் செயலாளர் – கே.ஏ.கே.
அரசியல் குழுச் செயலாளர் – நாஞ்சிலார்
பிரச்சார செயலாளர் – எஸ்.டி.எஸ்
தேர்தல் குழுச் செயலாளர் – கோவை செழியன்
தலைமை நிலையச் செயலாளர் – டாக்டர் எச்.வி. ஹண்டே
மாதர் பிரிவு – பி.டி. சரஸ்வதி
மாணவர் பிரிவு – எஸ். திருநாவுக்கரசு
தொழிலாளர் பகுதி – எஸ். இராகவானந்தம்.

இவ்வாறு ஏக காலத்தில் ஓர் அரசியல் கட்சியில் 15 செயலாளர்களை நியமித்ததும் வரலாறு காணாத விஷயமாகும். அதையும் புரட்சித் தலைவர்தான் முதன்முதலாகச் செய்தார். அப்படி 15 செயலாளர்களை நியமித்ததிற்குப் பின்னர், புரட்சித்தலைவருக்கு இதர இதர பணிகளைக் கவனிப்பது மிகவும் சௌகரியமாக இருந்தது.