சிறந்த பாடல்கள்
1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, உன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’
இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,
“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”
என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!
உண்மைதானே!
அச்சம் என்பது மூடர்களின் மூலதனமல்லவா! ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களே ஒன்றுகூடி 1972 – ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றியபோது, தனது இரசிகப் பெரும் பட்டாளத்தோடும், தாய்க்குலத்தின் தனிப்பெரும் ஆதரவோடும், துணிவையே துணையாகக் கொண்டு, தன்னைக் கட்சியில் இருந்து வெளியெற்றியவர்களையே ஆட்சியில் இருந்து அகற்றிய அஞ்சாத, அச்சமில்லாத சிங்கமல்லவா எம்.ஜி.ஆர்.
அவர்தானே,
‘அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்று கூறத்தகுந்தவர்.
நோயைக் கண்டு எம்.ஜி.ஆர். என்றேனும் அஞ்சினாரா? 1959 – ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதே’ திரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
(திருடாதே’ எம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். ஏ.எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, ப. நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம்)
1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார்.
(அவரது மருத்துவமனை நாடிக்கட்டு புகைப்படந்தான் தமிழ்நாடெங்கிலும் காங்கிரசு பேரியக்கத்தை, சரிவுக்குத் தள்ளி, தி.மு.கழகத்தை அதிசயமாய் விரைவில் ஆட்சிபீடத்தில் ஏற்றிவைத்தது எனில் மிகையாகா).
மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்; சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன்’, ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.
1983 – ஆம் ஆண்டு இறுதியில், சாதாரண நோய்க்காக சென்னை அப்போலோ மருந்துவமனைக்குச் சென்ற புரட்சித் தலைவர், கடுமையான நோய்க்கு உள்ளாகி, அமெரிக்காவில் உள்ள புருக்ளீன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எம்.ஜி.ஆர். உடல்நிலை பற்றிக் கொடூரமான வதந்திகள் பரப்பப்பட்டன. ‘அவர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறோம்! எனவே எங்களுக்கு வாங்களியுங்கள்!’ என்று எதிர்முகாமினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த வழிபாடுகளால் அமெரிக்காவில் இருந்து, எம்.ஜி.ஆர். திரும்பி வருவதற்கு முன்பே 1984 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரது இயக்கம் 136 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியது. எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டித் தொகுதியில் முப்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.
“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”
என்று கூறத்தகுந்த காலனை வென்ற, காலத்தை வென்று நிற்கும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். தானே!
தொடரும் பாடலில், வளரும் செய்திகளைப் பார்ப்போமா?
“கனக விஜயரின் முடித்தலை நெறித்து
கல்லனை வைத்தான் சேரமகன்!
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி,
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!”
தொடர்ந்த இப்பாடல் வரிகளில், தமிழ்ப்புவியை ஆண்ட பண்டைய மன்னர்களின் வீரம் பறைசாற்றப்பட்டது.
அடுத்து……!
“கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!
களங்கம் பிறந்தால் பெற்றவள மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை!
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி!
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர், மானம் காப்போர்,
சரித்திரம் தனிலே நிற்கின்றார்!”
கவியரசர் தீட்டிய இந்த வைர வரிகள், புவியரசர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில், வரலாறாய் நடந்து வந்த வரிகள் அல்லவா?
சத்தியா எனும் தாய், கருவினிலே வளர்ந்தபோதே தனது அன்பு மழலையாம், எம்.ஜி.ஆர். என்ற மகனுக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த தாயல்லவா!
பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச் செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக் காலமெல்லாம் துணையாய் நின்ற காவல் தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும் தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு, மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.
கோடி மக்கள் இம்மண்ணில் வாழ்ந்ததுண்டு. வாழ்ந்த சுவடுகள் தெரியாமல் மறைந்ததும் உண்டு. ஆனால் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பவர் யாவர்?
மாபெரும் வீரர்! மானத்தைக் காப்போர்!
இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல…. வருங்காலச் சரித்திரத்திலும் சாய்ந்துவிடாது நிலைத்து நிற்பர்.
உண்மைதானா? உண்மையே! உதாரணம்…. எம்.ஜி.ஆரே!
1980 – ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்! வெற்றியெனும் படிகளில் ஏறியே பயணப்பட்டு, பழக்கமாகிப் போன எம்.ஜி.ஆர். இத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தார்.
இந்திரா காங்கிரஸ் – தி.மு.க. என்ற கூட்டணித் திமிங்கலம், எம்.ஜி.ஆர். என்ற கடலில் இருந்த வெற்றி எனும் சுறாமீன்களையெல்லாம் விழுங்கிவிட்டது.
எம்.ஜி.ஆர். இயக்கம் சிவகாசி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய இரு பாராளும்ன்ற இடங்களை மட்டுமே பெற்றது.
‘இரு விரல்களைக் காட்டியவர்க்கு இரண்டு இடங்களே கிடைத்தன’ என்று வலுவான எதிர்முகாமினர், இரட்டை இலைச்சின்னத்தையும் இடித்துரைத்துப் பேசலாயினர்.
இத்தோடு விட்டார்களா? கூட்டணி பலத்தை நம்பி எம்.ஜி.ஆர். அரசு மீதும் இல்லாத பொல்லாத ஊழல் குற்றச் சாட்டுகளைக் கூறி, அரசையும் கலைத்து விட்டார்கள்.
மாபெரும் வீரர் எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மானப்பிரச்சனையாய் மாறிவிட்டது.
அரசைக் கலைத்தவுடன், இனி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்ற அதிரடிப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.
எம்.ஜி.ஆர். ஆமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நாஞ்சில் கி. மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி போன்ற பலரும் மாற்று முகாம்களை நோக்கிப் புறப்பட்டனர்.
1980 – ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ‘தி.மு.க – காங்கிரஸ்’ கூட்டணி இரு கட்சிகளும் சரி பாதி இடங்களில் போட்டியிட்டன. கூட்டணி வென்றால் கலைஞர் கருணாநிதியே தமிழக முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகப் பத்திரிக்கை உலகமோ, ‘சாய்ந்தால் சாய்கின்ற பக்கம்’, என்ற போக்கில் ‘தி.மு.க – இந்திரா காங்கிரஸ் கூட்டணி 210 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில், விட்டலாச்சார்யா படங்களில் வரும் மாயமந்திர ஜாலங்களைப் போன்றவற்றைச் செய்திகளாக்கி மக்கள் மத்தியில் திணித்தன.
ஆர்ப்பரிக்கும் ஆரவாரக் கூட்டணிக்கு நடுவில், மத்திய மந்திரிசபையின் படையெடுப்பிற்கு மத்தியில், கலைஞரின் உடன்பிறப்புகளின் உற்சாகப் போர்ப்பரணிக்கு இடையில், எம்.ஜி.ஆர் என்ற தனி மனிதர், தாய் சத்தியா கருவினிலே வளர்த்து ஈந்த தைரியத்தைத் தாரக மந்திரமாய்க் கொண்டு, தனது அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக மறவர்களின் மாபெரும் துணையோடு, என்றும் தளராத பாசத்தை அள்ளித்தரும் தாய்மார்களின் தணியாத பக்கபலத்தோடு தமிழக மக்களைத் துணிச்சலோடு தேர்தல் களத்தில் சந்தித்தார்.
நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? எனது தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது நியாயமா? மக்களே! நீங்களே எனக்கு நீதி வழங்குங்கள்!’ என்றே, எம்.ஜி.ஆர். சென்ற இடங்களில் எல்லாம் பேசினார்.
மறுமுனையில், பத்திரிக்கை கணிப்புகள், பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களை எடுத்துக் கூறியே, ஏகோபித்த நம்பிக்கையுடன் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே மறுமுனையில் வெற்றிவிழாச் சுவரொட்டிகள், நன்றி அறிவிப்புச் சுவரொட்டிகள் தயாராயின என்றும்; வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் பதவியேற்பு விழாவிற்காக ஆயத்தங்கள் செய்யப்பட்டு விட்டன என்றும் பேச்சுகள் எழுந்தன.
ஆனால் தேர்தல் முடிவுகளோ?… தலைகீழாய் மாறிப்போயின.
மானப்பிரச்சனையாய், தன்மானத்தோடு தேர்தலைச் சந்தித்த மாவீரன் எம்.ஜி.ஆர். இயக்கமே மாபெரும் வெற்றியைப் பெற்றது.
எம்.ஜி.ஆர். மதுரை மேற்குத் தொகுதியில் இருந்து, இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களைக் கைப்பற்றிய புரட்சித்தைவரின் அ.இ.அ.தி.மு. கழகம் 1980 – ஆம் ஆண்டுத் தேர்தலில் 139 இடங்களைக் கைப்பற்றியது.
எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயச் செல்வருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு, எதிர் அணியினர் அதிர்ந்தனர். பத்திரிக்கை உலகமோ பிரமித்தது. அன்னை இந்திராவோ அவசரப்பட்டுச் செய்த தன் செயலுக்காகப் பின்னர் வருந்தினார்.
இப்போது புரிகிறதா? கண்ணதாசன் என்ற காலக்கவிஞரின் கவிதை வாக்குகள் வாகைசூடிய விதங்களின் விநோதங்கள்…..!
கண்ணதாசனே கூறுவாரே!
“கவிஞர் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
……………………………..
வளமார் கவிகள் வாக்குமூலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!”
என்றெல்லாம்…………..
அவர் சொன்னவை சரிதானே!
நாம் உள்ளத்து உணர்வுகளை, துள்ளி எழுப்பி, உடன் அழைத்து, அமரவைத்து உணரச்செய்யும்,
“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!”
என்ற பாடலைப்போல், ஏராளமான பாடல்களை எம்.ஜி.ஆர். படங்களுக்காகக் கண்ணதாசன் படைத்து ஈந்துள்ளார்.
அவற்றுக்கெல்லாம் இப்பாடலுக்குக் கூறிய விளக்கங்கள் போல் விரிவுரைகள் காண்போமாயின், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர்!’ எனும் இந்நூலை, ஆயிரக்கணக்கான பக்கங்களுக்குமேல் தொடர வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, இனிவரும் காலத்தை வென்ற பாடல்களுக்கான கருத்துகளைச் சுருங்கக் காண்போம்.
இடையிடையே நம் இனிய கவிஞர், எம்.ஜி.ஆரைப் பற்றிக் கூறிய அரிய செய்திகளையும் அறிந்து செல்வோமாக. அத்துடன், அதிசய மனிதர் எம்.ஜி.ஆர். கண்ணதாசனைப் பற்றியும், அவரது பாடல்கள் குறித்தும் குறிப்பிட்ட சில செய்திகளையும் கண்டு செல்வோமாக.
1980 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட கண்ணதாசன், ‘இந்தியாவை அன்னை இந்திரா ஆளவேண்டும்! தமிழகத்தை எம்.ஜி.ஆரே ஆளவேண்டும்! என்று தமிழக மக்கள் விரும்பினார்கள். விருப்பங்களின் விளைவே பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள்!’ என்று குறிப்பிட்டார்.
கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் சர்வகட்சித் தலைவர்கள் (தி.மு.கழகம் நீங்கலாக) கலந்துகொண்ட இரங்கல் கூட்டம் 24.10.1981 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அமைச்சராக அன்று பதவி வகித்த ராஜதுரை உரையாற்றம்போது,
“கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறை கேட்கமுடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறை பாராட்டிக் கூறினார். முதல்வருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்த நேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.
இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச் செய்தார்.
பின்னர் பேசும்போது,
“இந்தப் பாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தால் இதை எல்லா மக்களின் மனதிலும் பிதயவைக்க முடியாது. சினிமா மூலந்தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது.
சாதாரண மக்களும் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் பாடி, நடித்த பாடல்காட்சிகளை டெலிவிஷனில் அடிக்கடி ஒலி-ஒளிபரப்ப வேண்டும்!” என்று குறிப்பிட்டார்.
இலங்கை அமைச்சர் பேச்சின் மூலமும், எம்.ஜி.ஆரின் பேச்சின் மூலமும் கண்ணதாசன் பாடல்களின் தனிச்சிற்ப்புகள் புலப்படுகின்றன. அத்துடன், அப்பாடல்கள் எம்.ஜி.ஆர். என்ற மனிதநேய நெஞ்சத்தைத் தொட்டு, உயர்ந்த இடத்தைப் பிடித்த நுட்பமும் புலனாகிறது அல்லவா?
