1972 அக்டோபர் 17 ! அன்றுதான் சர்வாதிகாரி ஜார் மன்னனை எதிர்த்துப் புரட்சித் தலைவர் மாமேதை லெனின் தலைமையில் ரஷ்ய நாட்டின் தொழிலாளர் வர்க்கம் புரட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்தது!.

ஆகா என்றெழந்தது யுகப்புரட்சி! அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன் ஜார்ஜ் மன்னன்! அந்தப் புனிதமான அக்டோபர் மாதம் 17 – ம் தேதியன்று தான் தமிழகத்தின் புரட்சித் தலைவர் புதுக்கட்சியைத் தொடங்கினார்! அறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது கொள்கைகளையும் தி.மு.க. தலைமை இருட்டடிப்புச் செய்வதால், தாம் தொடங்கிய புதிய கட்சிக்கு ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்னும் பெயரைச் சூட்டினார், புரட்சித் தலைவர்!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பைத் தொடங்கியது குறித்த அறிவிப்பை வெளியிடும் பெரும் பேறு முன்னாள் மேலவை உறுப்பினரான அனகாபுத்தூர் இராமலிங்கத்துக்கு கிட்டியது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை (கறுப்பு, சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவம்) புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.

புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த புரட்சித் தலைவர், அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் ‘தென்னகம்’ நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார்.

தங்கள் புரட்சிநாயகன் புதியகட்சியைத் தொடங்கிவிட்டார்; அக்கட்சிக்கு அறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டிவிட்டார் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் அகமகிழ்ந்தனர்; ஆனந்தக் கூத்தாடினர். உடனடியாகத் தமிழகம் முழுவதிலும் அண்ணா தி.மு.க. கிளைகள் உருவாக்கப்பட்டன. கட்சிக் கொடிகள் அவசர அவசரமாய் உருவாக்கப்பட்டு ஏற்றப்பட்டன.

தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழர்கள் வாழும் பெங்களூர், பம்பாய் முதலிய நகரங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கிளைகள் உருவாக்கப்பட்டன.

அதுவரை தி.மு.க. என்று வழங்கப்பட்டுக் கொண்டிருந்த கழகத்தை அதன்பின்னர் புரட்சித்தலைவர் ‘கருணாநிதி கட்சி’ என்றுதான் வழங்கினார்.

கருணாநிதி கட்சியிலிருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்.

புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம ஒன்றாய் இருந்தது. அடுத்த சில நாள்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர்.

அப்பொழுது கடசித்தாவல் தடைச்சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில் சேரவும், சேர்ந்த பின்னரும் நீடிக்கவும் சாத்தியப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பாவலர் முத்துசாமி, கே.ஏ. கிருஷ்ணசாமி முதலியோரும் தொடக்கத்திலேயே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர். அவர்களுள் பாவலர் முத்துசாமியைக் கழகத்தின் முதல் அவைத்தலைவராக நியமித்தார், புரட்சித்தலைவர்.

பின்னர் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவரின் அணியில் இணைந்தனர்.

புரட்சி நடிகர் புரட்சித் தலைவர் ஆனார்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் எனப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. ‘மக்கள் திலகம்’ என்று அவரை முதன்முதலில் வழங்கியவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணன் ஆவார். ‘புரட்சி நடிகர்’ என்று அவரை விளித்தவர், கலைஞர் கருணாநிதி ஆவார். ‘பொன்மனச் செம்மல் என்று வழங்கியவர் திருமுருக கிருபானந்தவாரியார் ஆவார்.! ஆனால் புரட்சி நடிகராய் விளங்கிய எம்.ஜி.ஆரை முதன் முதலில் புரட்சித்தலைவர்’ என்று வழங்கியவர் ‘தென்னகம்’ ஆசிரியரும், அ.தி.மு.க.வின் முதல் அமைப்புச்செயலாளரும், பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினருமான கே.ஏ.கிருஷ்ணசாமி ஆவார்.

அ.தி.மு.க.வின் சார்பில், 1972 ஆம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதியன்று, சென்னை கடற்கரை சீரணி அரங்கில் ஒரு பிருமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கே.ஏ.கே. ”இதுவரை நம் தலைவரை நாம் அனைவரும் புரட்சி நடிகர் என்றே வழங்கினோம். இனிமேல் அவர் புரட்சி நடிகர் அல்லர். புரட்சித் தலைவர்! ஊழலை ஒழித்துக்கட்டும் தர்மயுத்தத்தின் தானைத் தலைவர்! இனி மேல் நாம் அனைவரும் அவரைப் புரட்சித் தலைவர் என்றே வழங்க வேண்டும்!” என்று கூறினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம் ”புரட்சித் தலைவர் வாழ்க!, புரட்சித் தலைவர் வாழ்க!” என்று விண்ணதிர முழக்கமிட்டது. கடல் அலைகளின் ஓசை சில நிமிடங்கள் அமுங்கிவிட்டது போன்ற நிலை அங்கே தோன்றியது. புரட்சி நடிகராய் இருந்த மக்கள் திலகம், பொன்மனச்செம்மலாகிப் புரட்சித் தலைவராய் மாறிய வரலாறு இதுதான்!

புரட்சித் தலைவரின் வீர விளையாட்டு!

புரட்சித் தலைவர் திரைப்படங்களில் வீராவேசத்தோடு சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார்; இருபது முப்பது பேரோடு ஏக காலத்தில் மோதி அவர்களைப் பந்தாடியிருக்கிறார். இக் காட்சிகளை அவர் நடித்த திரைப்படங்க்ளில் பார்த்திருக்கலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சிக் கொண்ட மாற்றுக்கட்சியினர் அவரை ‘அட்டைக்கத்தி’ வீரர், என்றும், பெரும்பாலான காட்சிகளில் தம்க்குப் பதிலாகப் பிறரை நடிக்கச் செய்து, தாம் நடித்ததாக ஏமாற்றம் ‘டூப்’ சண்டை ஆடுபவர் என்றும் ஏளனம் செய்து கொண்டிருந்தனர்.

புரட்சித் தலைவர் தி.மு.க.விலிருந்து தனிக்கட்சி தொடங்கிய பின்னர் தி.மு.க.வினரும் அதே ஏளனப் பேச்சை மேடைதோறும் கூறிக்கொண்டிருந்தனர். அப்படி ஏளனம் செய்தவர்களெல்லாம் எம்.ஜி.ஆரின் வீரத்தையும், தோள் வலிமையையும் நேருக்கு நேராய்க் காணும் வாய்ப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க காலத்தில் கிட்டியது.

எதிரிகள் விளைவித்த இன்னல்கள்

தமிழகம் முழுவதிலும் ஏராளமான தொண்டர்கள் புரட்சித்தலைவரின் இயக்கத்தில் தினசரி சேர்ந்து கொண்டிருந்தனர். சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட, அமைப்பாளர்களும் ஆளுங்கட்சியை விட்டு விலகினர். தாம் வகித்த பதவியின் மூலம் பெறக்கூடிய சலுகைகளையும் இலாபங்களையும் உதறினர்; கடுமையான அடக்கு முறைக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்த அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். அதைக் கண்ட தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்தது. அதனால் நாடு முழுக்க கடும் அடக்குமுறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அண்ணா தி.மு.க. தொண்டர்கள் தாக்கப்பட்டனர். ஏழை எளியவர்கள், கூலி வேலை செய்வோர், ரிக் ஷா, கைவண்டி இழுப்போர், மூட்டைத் தூக்குவோர், விவசாயக் கூலிகள், பாட்டாளி வர்க்கத்தினர் ஆகியோர்தாம் அ.தி.மு.க. தொண்டர்களுள் பெரும்பாலானவர்களாய் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் மீது ஒருபுறம், குண்டர்கள் தாக்குதல் தொடுக்கப்பட்டது; மற்றொரு புறம் பொய் வழக்கிட்டு அலைகழிக்கும் தாக்குதல் இடைவிடாமல் தொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டங்களுக்கு போலீஸ் அனுமடி வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டப்பட்டது. பொது அமைதிக்குப் பங்கமு விளையும் என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது. அனுமதி பெற்று நடக்கும் அ.தி.மு.க. கூட்டங்களில் ஒரு கும்பல் கல் எறிந்து கலவரம் செய்தது; இன்னொரு கும்பல் நாய் நரியைப்போல ஊளையிட்டு இடையூறு விளைவித்தது.

அ.தி.மு.க. மேடைப் பேச்சாளர்க்ள் மீது எண்ணற்ற பொய் வழக்குகள் தொடரப்பட்டன. புரட்சித் தலைவர் பேசிய பொதுக்கூட்டங்களைக்கூட ஒழுங்காக நடக்க விடாமல் தடுப்பதற்குச் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வளவுக்கும் மத்தியில்தான் புரட்சித்தலைவர் கட்சியைக் கட்டிக்காத்து வளர்க்க நேரிட்டது.
அந்த சமயத்தில் புரட்சித் தலைவர், கடலூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்றிருந்தார். அந்தக் கூட்டம் கடலூர் டவுன் ஹாலில் நடைபெறவிருந்தது. அக்கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் ஒருவர் குண்டர்கள் பலருடன் தடிக்கம்புகளுடனும் வந்து நின்றிருந்தார்.

புலியெனப் பாய்ந்தார் புரட்சித் தலைவர்!

புரட்சித் தலைவர் காரில் வந்து இறங்கினார். புள்ளிமானின் மீது பயும் புலியாக, அடியாள்களும் அவர்களைஅழைத்து வந்தவரும் புரட்சித் தலைவர்மிடு பாய்ந்தனர். கடலூர் எம்.ஜி.ஆர் மன்றத் தலைவராகப் பணியாற்றியவர், இளைஞர் ஜனார்த்தனம் ஆவார். அவர் ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் குறுக்கே புகுந்து புரட்சித் தலைவருக்குக் குறி வைத்து வீசப்பட்ட தடியடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டார். அதனால் புரட்சித்தலைவரின் மேல் ஓரடிகூட விழாமல் தடுக்கப்பட்டன. ஆனால், புரட்சித்தலைவரைத் தாக்க வந்த கொலைவெறியர்கள் வெறி அடங்காமல் மேலும் மேலும் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

அந்த வெறியர்களின் தாக்குதலைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தக் கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்குக் கோபம் எழுந்தது. உடனே அந்தக் கொலை வெறியர்களுக்கு மத்தியில் அவர் புலிபோல் பாய்ந்தார். அப்போது குண்டன் ஒருவன் எம்.ஜி.ஆர். தலையைக் குறி வைத்துக் கழியை ஓங்கினான். உடனே எம்.ஜி.ஆர். கழியை வெறுங்கையாலேயே தடுத்துப் பிடித்து, ஒரு சுழற்றுச் சுற்றிப் பிடுங்கினார். அடுத்த விநாடி அவர் கையிலிருந்த கழி, சக்ராயுதம்போல நாலாபக்கமும் சுழன்றது. தாக்க வந்த தடியர்களோ, மின்னல் வேகத்தில் தங்கள்மீது பாய்ந்த கழியின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல், ”ஐயோ! அம்மா” என்று அலறிக்கொண்டு பின்வாங்கி ஓடினார்கள். இரண்டே நிமிடம்தான் புரட்சித் தலைவர் கழியைச் சுழற்றினார். அவரைச் சூழ்ந்து நின்று தாக்க வந்த கும்பல் முழுவதும் அளறியடித்துக்கொண்டு சிதறி ஓடியது.

திரைப்படங்களில் மட்டுமே புரட்சித்தலைவரின் புலிப்பாய்ச்சலையும் கைவண்ணத்தையும் கண்டு களித்திருந்த மக்கள் அன்று நேரிலும் கண்டு களித்தனர்! கடலூர் மக்களுக்குத்தான் அந்தப் பெரும் பேறு முதன் முதலாகக் கிட்டியது!

தாக்க வந்த குண்டர்கள் அனைவரும் கலைந்து ஓடியதும் காவல் துறையின் பெரிய அதிகாரிகளெல்லாம் விரைந்து வந்தனர்! புரட்சித் தலைவரை சூழ்ந்து நின்ற அவர் தொண்டர்களிடமே தங்கள் அதிகார முறுக்கைக் காட்டினர்.

அதைப்பார்த்து புரட்சித் தலைவரின் முகம் மேலும் சிவந்தது. ”உங்கள் கடமை உணர்வுக்கு மிக்க நன்றி! உங்கள் பாதுகாப்பை நம்பி நான் வெளியே வரவில்லை. தயவு செய்து எங்கள் கட்சிக் காரர்களைத் தொந்தருவு செய்யாமல் தூர விலகிச் செல்லுங்கள்!” என்று அவர் கூறினார்.

அதற்குப் பின் டவுன்ஹால் கூட்டம் தடையின்றிச் சிறப்பாக நடந்து முடிந்தது!

இது மட்டுமல்ல; 1972 -ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் தி.மு.க. அமைச்சரவை பதவி நீக்கம் செய்யப்பட்ட 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி வரை, சுமார் மூன்றேகாலாண்டுகளிலும் நடந்த எண்ணற்ற சம்பவங்களைப் புரட்சித் தலைவர் சந்திக்க நேர்ந்தது.

கழகத்தின் மீது கடுந்தாக்குதல்!

சேலம் நகரில், கழகத்தின் அமைப்புச் செயலாளரான கே.ஏ. கிருஷ்ணசாமி எம்.பி. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார். அங்கே அவர் கழக்க் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது ஊரறிந்த தி.மு.க. உறுப்பினன் ஒருவன், கையில் கத்தியோடு கே.ஏ.கே. மீது பாய்ந்து அவரைக் குத்திக் கொல்ல முயன்றான். அருகில் இருந்தவர்கள் தக்க சமயத்தில் அவன் மீது பாய்ந்து அவனைப் பிடித்தனர்; கே.ஏ.கே. தப்பினார்.

எல்லாரும் சேர்ந்து அவன் கையையும் காலையும், கட்டி, கத்தியோடு கொண்டுபோய்க் காவல் நிலையத்தில் சேர்த்தனர். கே.ஏ.கே. யே தம் கைப்பட புகார் எழுதிக் கொடுத்தும், அந்தக் கொலைகாரன்மீது கண் துடைப்புக்காக்க்கூட காவல் துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாஞ்சில் மனோகரன் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராவார்.

அவர் 1972 ஆம் ஆண்டில், பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்வதற்காகச்சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குச் சென்றார். அவரைப் போலவே, பாராளுமன்றக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. உறுப்பினர்கள் சிலரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள், நாஞ்சிலாரைதக் கண்டதும் தி.மு.க.வினர், பதட்டமடைந்தனர்.

”டேய் துரோகி!” என்று கூச்சலிட்டுக் கொண்டே நாஞ்சிலார் மீது பாய்ந்து அவரைத் தாக்கினார்கள்; இதய நோயாளியான அவருடைய நெஞ்சில் சரமாரியாக்க் குத்தினார்கள். அங்கிருந்து பதறி ஓடிய நாஞ்சிலார், விமான நிலைய நிருவாகியின் அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டார். அங்கிருந்து தொலைபேசியின் மூலம் புரட்சித் தலைவருடன் தொடர்புகொண்டு தம்மைக் காப்பாற்றும்படி வேண்டுகோள்விடுத்தார்.

புரட்சித்தலைவர் மனோகரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ”கவலைப்படாதீர்கள், இன்னும் பத்தே நிமிடத்தில் நம் ஆட்கள் பறந்து வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள்!” என்றும் கூறினார்.

புரட்சித் தலைவர் தொலைப்பேசியைக் கீழே வைத்துவிட்டு சத்யா ஸ்டுடியோ பத்மநாபனிடம் நாஞ்சில் மனோகரனின் நிலைமையைச் சொல்லி, ”உடனே தேவையான ஆள்களோடு போய் நாஞ்சிலாரைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்.

அடுத்த நிமிடம் பத்மநாபன் பத்துப் பேரோடு ஒரு காரில் ஏறி மீனம்பாக்கத்தை நோக்கிப் பறந்து சென்றார். புரட்சித் தலைவருக்கோ அவர் நண்பர்களுக்கோ ஓர் ஆபத்து என்றால், தம்மைப் பலி கொடுத்தாவது காப்பாற்றத் தடிக்கின்ற அறபுதமான தொண்டர், பத்மநாபன்.

பத்மநாபன் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் புயல்போல் புகுந்து, தி.மு.க. எம்.பி.க்களின் முற்றுகையைத் தகர்த்தெறந்தார்; நாஞ்சிலாரை மீட்டுக்கொண்டு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் புரட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார்.

இப்படி இன்னும் எத்தனையோ கொலை வெறித்தாக்குதல்களுக்கு அ.தி.மு.க.வினர். ஆளாகியுள்ளனர்.

சைக்கிள் செயின் வீசுவோரின் சமாதானப் பேச்சு

பரட்சித் தலைவர் அ.தி.மு.க வை ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அவருக்கும், தி.மு.கழகத் தலைமைக்கும் இடையில் கடைசி நேரச் சமரச முயற்சி ஒன்று நடந்தது. முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் அது சம்பந்தமாகச் சத்யா ஸடுடியோவில் பரட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எம்.ஜி. ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன், தம் தலைவரைப பார்ப்பதற்காக்க் காரில் வந்துகொண்டிருந்தனர். அவரைக்கடற்கரைச் சாலையில் வழிமறித்துச் சைக்கிள் செயினால் தாக்கினார்கள்.

முசிறிப்புத்தன் அவர்களிடமிருந்து உயிர் தப்பிப் புரட்சித் தலைவரிடம் வந்து செய்தியைச் சொன்னார். ஒரு கால் சற்றே ஊனமான அவரைக் கொலை வெறியோடு தாக்கி, உடல்முழுக்க இரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்களே என்று புரட்சித் தலைவர் மிகுந்த வேதனையடைந்தார்.

அந்த நிமிடம் வரை தி.மு.க. வோடு சமாதானத்திற்கு இசைந்து விடலாம் என்றுதான் புரட்சித் தலைவரும் கருதிக் கொண்டிருந்தார். ஆனால், இரத்தக் கடாகத்தில் மூழ்கி எழுந்தவர் போளத் தம் முன்னால் இரத்தம் வழிய வழிய வந்து நின்ற முசிறிப்புத்தனைப் பார்த்ததும் புரட்சித் தலைவரின் உள்ளம் துடித்தது.

சமாதானம் பேச வந்தவர்களைப் பார்த்து, ” ஒரு பக்கம் சமாதானம் பேசுகிறீர்கள்; இன்னொருபக்கம் என் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித் தாக்ககுதல்களை ஏவி விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்! இது என்ன நாடகம்? இனி மேல் உங்களோடு சமரசத்திற்கே இடமில்லை!” என்று கூறினார்.

அதற்குப் பின்னர்தான் சமரச முயற்சி தோற்றது. இவ்வாறு அ.தி.மு.க. தோன்றுவதற்கு முன்னும் பின்னும் நடந்த, கட்டவிழ்த்து விடப்பட்ட கொலை வெறித்தாக்குதல்கள் கண்க்கிலடங்காதவை ஆகும். இத்தகைய வெறித்தாக்ககுதலுக்குப் பலியாகி உயிர் துறந்த கழகத் தோழர்களின் தொகை மட்டும் 20 ஆகும். ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கும் தி.மு.கழகத் தலைமைக்கும் சம்பந்தமில்லை என்றும், ஆங்காங்கே உள்ள உணர்ச்சிவசப்பட்ட சிலர் தாமாகவே அவற்றில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தி.மு.க. விளக்கம் அளித்தது.

அ.தி.மு.க. மீது தி.மு.க. வினர் தாக்குதல் தொடுத்தது ஒருபுறமிருக்க மறுபுறம் அண்ணா தி.மு.க. தொண்டர்களின், மீதும் முன்னணி வீர்ர்களின் மீதும் தி.மு.க. அரசு தொடுத்த கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் மொத்தம் 48000 ஆகும். இது மிகைப்படுத்தப்பட்ட தகவலோ, கற்பனையோ அல்ல. அது மட்டுமா? புரட்சித் தலைவர் மீது அரசு தொடுத்த வழக்குகள் மட்டும் 19 ஆகும்.

இப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திட ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட அடக்குமுறைகள், தொடர்ந்த பொய்வழக்குகள் தொடுத்த தாக்குதல்கள் ஆகியவை ஏராளம் ஆகும்! இவ்வளவையும் மீறித் தான் கட்சியைக் கட்டி வளர்த்தார். பரட்சித் தலைவர்!

தொழில் ஏற்பட்ட தடைகள்

அ.தி.மு.க. வைத் தொடங்கிய நேரத்தில், புரட்சித்தலைவர் தாமே நடித்து, இயக்கி, தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியிடப்படவேண்டிய நிலையில் இருந்தது. உடனே அந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டனர்.

அதிகார வலிமை பெற்ற சிலர், அந்தப் படத்திற்கு விநியோக உரிமை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையெல்லாம் சந்தித்து மிரட்டினார்கள். ”படம் வேண்டாம். கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என்ற்உ கேட்கும்படி விநியோகஸதர்களை வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் காலமாய்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். படங்களை வாங்கி விநியோகித்ததன் மூலமே பெரும் பணம் சம்பாதித்தவர்கள் அந்த விநியோகஸ்தர்கள் அவர்கள் அந்த உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து புரட்சித் தலைவரை நெருக்கடிக்குள்ளாக்க மறத்துவிட்டனர்.

படவிநியோகஸ்தர்களை மிரட்டிப் பணியவைக்க முடியவில்லை என்றதும் அவர்களது கவனம், திரையரங்குகளின் மேல் திரும்பியது. திரையரங்குளின் உரிமையாளர்களை அழைத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் திரையரங்குப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டிப் புரட்சித் தலைவரின் படத்தைத் திரையிட மறுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், இலட்சம் இலட்சமாய் வசூலை வாரித்தரும் எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிடாதிருக முடியாது. எனத் திரைரங்க உரிமயாளர்கள் மறுத்துவிட்டனர். சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே அந்த வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தனர். அவர்களுள் பலர் அதிகாரத்திற்கு அஞ்சித் தாங்கள் செய்த காரியத்தைச்சொல்லி புரட்சித் தலைவரிடமும் மன்னிப்புக் கோரினார்கள்!

பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் எம்.ஜி.ஆர். படத்தைப் புறக்கணிக்கச் சம்மதிக்கவில்லை என்றதும் அவர்களை வேறு வகையில் மிரட்டத் தொடங்கினார்கள்.

”எம்.ஜி.ஆர் படம் திரையிடப்பட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம்! திரையைக் கிழிப்போம்! படச்சுருளைப் பஸ்பமாக்குவோம்!” என்றெல்லாம் மிரட்டினார்கள்; கடிதம் எழுதினார்கள்; சிலர் அறிக்கை விடும் அளவுக்குத் துணிந்தார்கள்!

திரையரங்க உரிமையாளர்களுள் பலர் இந்த இரண்டாவது வகை மிரட்டலைக்கண்டு உண்மையிலேயே அஞ்சி நடுங்கினார்கள். பல இலட்சம் ரூபாயைக் கடன் வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்குகள் கொளுத்தப்படும் என்னும் மிரட்டல் அவர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், முன்னணித் திரையரங்க உரிமையாளர் பலர் ஏற்கெனவே வாக்களித்தபடி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் திரையிடத் தயங்கினார்கள். பின் வாங்கினார்கள்.

ஆனால், புரட்சித் தலைவர் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கோ, திரையரங்க உரிமையாளர்களின் பின் வாங்களுக்கோ சற்றும் அஞ்சவில்லை. துணிந்து தம்முடைய படத்தை வெளியிட்டார். தமிழகம் முழுவதிலும் ஒரே நாளில் வெளியிட்டார்.

அந்தப் படம் திரையிடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் வெற்றிகரமாய் ஓடியது! எந்த விதமான பெரிய விளம்பரமும் இல்லாமலே தாய்மார்களின் கூட்டம் படத்தைக் காண அலைமோதியது; இளைஞர்கள் கூட்டமோ மீண்டும் மீண்டும் அதே படத்தைப் பல முறை கண்டுகளித்தது. எனவே பல்வேறு திரையரங்குகளில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது! மேலும் சில திரையரங்குகளில் 31 வாரம் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது!.

ஆனால், அதற்குப் பின்னரும் புரட்சித்தலைவரின் எதிரிகள் சும்மா இருந்துவிடவில்லை. அடுத்து வெளிவர இருந்த எம்.ஜி.ஆர். படங்களையும், தயாரிப்பிலிருந்த படங்களையும் தடுக்கும் திருப்பணியைத் தொடர்ந்தனர்.

அப்பொழுது புரட்சித் தலைவர் நடித்துக் கொண்டிருந்த படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் எல்லாருமே இலட்சாதிபதிகள் அல்லர் அவருள் சிலரைத தவிர மற்றவர்களெல்லாம் சாமானியர்கள்தாம்.அவர்களின் ஒரே முதலீடு புரட்சித் தலைவர்தான்.! அவர் பெயரைச் சொல்லிக் கடன் வாங்கித்தான் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கட்டப் படப்பிடிப்புக்கும் எம்.ஜி.ஆரின் கால் ஷீட்டுக்களைக் காட்டி விநியோகஸ்தர்களிடமும், பைனான்சியர்களிடமும் பணம் வாங்கித்தான் அவர்கள் தங்கள் தயாரிப்பைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்த விநியோகஸ்தர்களையும் பைனான்ஸியர்களையும் அழைத்து சிலர் தொடர்ந்து மிரட்டிகொண்டருந்ததனால் அவர்களுள் சிலர் வாக்களித்த தொகைகளைக் குறிப்பிட்ட கால்த்தில் கொடுக்காமல் காலம் கடத்தினார்கள். அதன் விளைவாகப் புரட்சித் தலைவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியிடப்பட முடியாமல் தாமதப்பட்டன.

அப்படி காலதாமதமாய் வெளிவந்த சில படங்கள் சிறப்பாக ஓடி வெற்றிப்பெற்றாலும் தயாரிப்பாளர்களுக்கு நட்டமே ஏற்படுத்தின; விநியோகஸ்தர்களும், திரையரங்க அதிபர்களும் தாம் இலாபம் பெற்றனர். அதற்குக் காரணம், படத்தயாரிப்பாளர்கள் பலரும் பைனான்ஸியர்களிடம் அதிகமான் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்ததுதான். குறிப்பிட்ட காலத்திற்குள் படம் வெளிவந்தால் வட்டி குறையும்; தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு இலாபம் கிட்டும். தாமதமாகப் படம் வெளிவந்தால் அதிகரிக்கும் வட்டித் தொகை அவர்களுடைய இலாபத்தைக் குறைத்துவிடும்! இதுதான் திரையுலக பொருளாதாரம்.

இதை நன்கு அறிந்திருந்த எம்.ஜி.ஆரின் எதிரிகள் பைனான்ஸியர்ளை மிரட்டி, புரட்சித் தலைவரின் படங்களுக்கு வாக்களித்தப்படி உரிய காலத்தில் கடன் தொகையைக் கொடுக்காமல் தாமதிக்கச் செய்தனர். அதன் மூலம், புரட்சித் தலைவரை நடிக்கச் செய்து திரைப படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் பலரை நட்டமடையச் செய்தார்கள்.

பின்னர், எம்.ஜி.ஆரை நடிக்கச் செய்து படம் தயாரிப்பவர்களுக்கு இனிமேல் இதுதான் கதி” என்று பிரச்சாரமும் செய்தனர். இவ்வாறு தொழில்துறையிலும் புரட்சித் தலைவரை செயலற்று விடச் செய்யவும் ஒழித்துக் கட்டவும் அவர் எதிரிகள் பெரும் முயற்சி செய்தனர். அடையும் மீறி புரட்சித் தலைவர்க திரைப்படத் தொழிலில், அசையாது நிமிர்ந்து நின்றார். 1972 முதல் 1978 வரை ஆன ஆறாண்டுக் காலத்தில் அவர் 16 வெற்றிப் படங்களைக் கொடுத்தார்! இந்த முனையிலும் அவர் எதிரிகள் தோல்வியையே தழுவினார்கள்!