பிரதமர் பதவியில் இருந்தபோது இந்திராகாந்தி அம்மையாரின் தமிழ்நாடு காங்கிரஸோடு உடன்பாடு காண முடியாத நிலையில் எம்.ஜி.ஆர். அதற்கு எதிரணியில் இருந்தார் என்றாலும் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இல்லாதபொது அவரிடம் புரட்சித் தலைவர் மிகுந்த பரிவோடும் பாசத்தோடுந்தான் பழகினார்.

1978 ஆம் ஆண்டு இறுதியில் இந்திரா காந்தி ஜனதா ஆட்சியால் பழிவாங்கப்பட்டார். அப்போது இந்திராகாந்தி சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டபோது அவரை முழு ஆதரவாகப்பணியாற்ற முசிறிப்புத்தன் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர் படையையும் புரட்சித் தலைவர் அனுப்பிவைத்தார்.

இந்திராகாந்தி வெற்றிப் பெற்றுப் பாராளுமன்ற உறுப்பினரானார். ஆனால், அதற்கு முந்திய பாராளுமன்றத்தில் அவர் நடந்து கொண்ட முறையைக் காரணம் காட்டி ஜனதாஅரசு இந்திரா காந்தியை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்ற விடாமல் எம்.பி. பதவியை இரத்து செய்ய வைத்தது.

1979 ஆம் ஆண்டு மே மாத்த்தில் தஞ்சைப் பாராளுமன்றத் தொகுதியில் நிகழவிருந்த இடைத் தேர்தலில் இந்திரா காந்தி மதுரைக்கு வந்திருந்தபோது தி.மு.க.வினர் நடத்திய கடுமையான தாக்குதலில் இந்திரா காந்தி மயிரிழையில் உயிர் தப்பினார். அந்த நிலையில் அவர் தஞ்சையில் போட்டியிட்டால் பாதுகாப்புப் பிரச்சினை மிகவும் சிக்கலாகிவிடும் என்று கருதிய புரட்சித்தலைவர், தஞ்சையில் வேறு யாரையாவது காங்கிரசின் சார்பில் போட்டியிடச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதனால் காங்கிரஸ் மேலிடத்திற்கு வருத்தமும் கோபமும் ஏற்பட்டன. என்றாலும், தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிங்காரவேலுவை அ.இ.அ.தி.மு.க. ஆதரித்தது. அவரும் வெற்றிப்பெற்றார்.

மத்திய அமைச்சரவையில் அ.இ.அ.தி.மு.க.

1979 ஆம் ஆண்டில் மத்தியில் சில அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. பிரதமர் மொரார்ஜியின் அமைச்சரவை கவிழ்ந்தது. இந்திரா காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் சரண்சிங் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது. அதற்கு அ.இ.அ.தி.மு.க. ஆதரவளித்தது.

அ.இ.அ.தி.மு.க. வைச் சேர்ந்த சத்தியவாணிமுத்து, பாலா பழனூர் ஆகிய இருவரும் சரண்சிங் அமைச்சரவையிலும் சேர்ந்தனர். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது. அதுதான் முதல் தடவையாகும். அவர்கள் இருவரும் குறுகிய காலம்தான் மத்திய அமைச்சர்களாய் இருந்தாலும், இந்தச் சாதனையை முதன் முதலில் நிகழ்த்திக் காட்டியவர், புரட்சித் தலைவர்தாம்!’

அ.இ.அ.தி.மு.க. அரசு டிஸ்மிஸ்

அ.இ.அ.தி.மு.க.வின் மீது கொண்ட கோப்பத்தால் இந்திரா காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க.வோடு கூட்டணி அமைத்துக்கொண்டு போட்டியிட்டது.

ஜனதா ஆட்சயின் மீது கோபம் கொண்டிருந்த தமிழக மக்கள் இந்திராகாங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களித்தனர். இந்திரா காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், தி.மு.க. 16 தொகுதிகளிலும், முஸ்லீம் லீக் 1 தொகுதியிலும், வெற்றி பெற்றது. அ.இ.தி.மு.க. ஜனதாக் கட்சிக் கூட்டணி மிக மோசமாகத் தோல்வியடைந்தது.

அதைத்தொடர்ந்து மத்தியில் மீண்டும் காங்கிராஸ் ஆட்சி அமைந்தது. தி.மு.க.வின் தூண்டுதலால் பிரதமர் இந்திரா காந்தி தமிழக ஆட்சியை டிஸ்மிஸ் செய்து சட்டமன்றத்தையும் கலைத்தார். அ.இ.அ.தி.மு.க.வின் சரித்திரம் முடிந்தது. என்றே பலரும் கருதினார்கள்.

மீண்டும் வெற்றி மாலை!

அ.இ.அ.தி.மு.க. அரசைக் கவிழ்த்த கையோடு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும் நாள் குறித்து, மத்திய அரசு.

மீண்டும் அரசியல் கட்சிகள் புதிய கூட்டணியை அமைத்தன. தி.மு.க.வும் இந்திராகாங்கிரஸும் புதிய கூட்டணியை அமைத்தன.

அ.இ.அ.தி.மு.க.வும் இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளும், இதர சில கட்சிகளும் மற்றொரு கூட்டணியை அமைத்தன.

1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் சந்தித்த ஒரே பிரச்சினை அடுத்த முதல்வர் கருணாநிதியா, எம்.ஜி.ஆரா என்பதுதான்.

பாராளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தியை ஆதரித்த தமிழகமக்கள், சட்டனமன்றத் தேர்தலில் கருணாநிதியை ஆதரிக்கத் தயாராக இல்லை. அ.இ.அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்குமே பெருவாரியான வெற்றியை அளித்தனர். அ.இ.அ.தி.மு.க. 129 தொகுதிகளிலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி 11 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளிலும் பார்வர்டு பிளாக் கட்சி 3 தொகுதிகளிலும், காந்தி காமராஜ் கட்சி 1 தொகுதியிலுமாக, இந்த கூட்டணி 160 தொகுதிகளைக் கைப்பற்றியது.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியோ 69 தொகுதிகளில்தான் வென்றது. தமிழக மக்கள் புரட்சித் தலைவருக்கே வெற்றிமாலையைப் பரிசாக அளித்தனர். 1980 ஆம் ஆண்டு ஜூன் மாத்த்தில் புரட்சித் தலைவர் மீண்டும் தமிழக முதலமைச்சரானார். சரித்திர நாயகர் மீண்டும் சாதனை நாயகர் ஆனார்.!

இரண்டாவது தடவை முதலமைச்சரான பின்னர் புரட்சித் தலைவர் மக்கள் நலனையே பிரதானமாய்க் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து அமல்படுத்தினார்! மத்திய அரசோடு நல்லுறவை வளர்த்துக்கொண்டார்.!