1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதியன்று புரட்சித் தலைவரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள்; 14 – ஆம் தேதியன்று நிரந்தரமாகவே (டிஸ்மிஸ்) நிக்கினார்கள்; எம்.ஜி.ஆர் 16 – ஆம் தேதியன்று அது பற்றி அறிவித்தார். 18 – ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 3 ஆம் தேதிக்குள்- எண்ணிப் பதினைந்தே நாட்களுக்குள் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலும் 6000 கிளைகள் தொடங்கப்பட்டன. 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 15 நாள்களில் 10 இலட்சம் உறுப்பினர்க்கைச் சேர்ந்த சாதனையை உலகில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதற்கு முன்னர் சாதித்ததே இல்லை.!

1949 இல் தொடங்கப்பட்ட தி.மு.க.வுக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் – அதாவது, 1972இல் தான் -18,000 கிளைகளும், 15 இலட்சம் உறுப்பினர்களும் இருப்பதாகத் தி.மு.க. தலைவர் கருணாநிதியே அந்தச் சமயத்தில் ஒப்புக்கொண்டார். அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 15 நாள்களில் பத்து இலட்சம் உறுப்பினர்களையும், ஆறாயிரம் கிளைகளையும் உருவாக்கியது எவ்வளவு பெரிய சாதனை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்!.

சரித்திர நாயகர் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட சாதனை இது என்றுதான் கூறவேண்டும்.

இந்த சாதனை, புரட்சித் தலைவருக்கு தி.மு.கழகத்திலும், பொதுமக்கள் மத்திலும் எத்துணை செல்வாக்கு இருந்தது என்பதை எடுத்துக்காட்டியது.

1972 – ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 5 – ஆம் தேதியன்று அண்ணா சாலையிலிருந்து பத்து இலட்சம் பேர் கொண்ட பிரும்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டது. அதற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கி, கிண்டி கவர்னர் மாளிகைக்குச் சென்று அப்போதைய ஆளுநர் கே.கே.ஷாவைச் சந்தித்தார். எம்.ஜி.ஆருடன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் எம். கல்யாண சுந்தரமும் இருந்தார்.

ஆளுநர் கே.கே.ஷோ, புரட்சித் தலைவர் கொடுத்த ஊழல் புகார்ப் பட்டியலை பெற்றக்கொண்டார். அவர் அந்தப் புகார்களை முதல்வர் கருணாநிதிக்கே அனுப்பி, அவர் பதிலைப்பெற்று அதற்குகப் பின்னரே அதை மத்திய அரசுக்கு அனுப்ப முடியும் என்றும், அதுதான் சட்டப்படியான முறை என்றும் கூறினார்

ஆளுநரின் அச்சட்ட விளக்கத்தைப் புரட்சித் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால், அந்த ஊழல் புகார்ப்பட்டியலை ஆளுநரிடம் கொடுக்காமல் திரும்பினார், பரட்சித் தலைவர். நவம்பர் 6 – ஆம் தேதியன்று அவர் கம்யூனிஸ்டுத் தலைவர் கலியாண சுந்தரம், கே. பாலதண்டாயுதம், கே.ஏ.கே , எஸ்.டி. சோமசுந்தரம் ஆகியோரை அழைத்துக்கொண்டு புதுடெல்லிக்குப் பறந்தார்; அன்றே இந்திய ஜனாதிபதி வி.வி. கிரியைச் சந்தித்து; அந்த ஊழல் புகார்ப்பட்டியலை ஜனாதிபதியிடம் கொடுத்தார்.

ஒர் அமைச்சரவையின் மீது ஒரே நேரத்தில் இரு ஊழல் புகார்ப்பட்டியல்கள் கொடுக்கப்பட்டது, இந்திய அரசியல் வரலாற்றிலேயே அதுதான் முதல் தடவை ஆகும் எனக் கூறப்பட்டது.

அன்றைய தினம் தலைநகரத்துப் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார், புரட்சித்தலைவர். சர்வதேசத் தலைவர்களையே கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கும் பத்திரிகையாளர்கள் புரட்சித்தலைவரை மட்டும் விட்டுவிடுவார்களா?

எம்.ஜி.ஆரிடமும் பத்திரகையாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் புரட்சித் தலைவர் தயக்கமின்றி நிதானமாயும் ஆணித்தரமாயும் பதிலளித்தார்.

அப்பொழுது ஒரு நிருபர், ”தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டீர்களா?” என்று கேட்டார்.

அதற்குப் புரட்சித் தலைவர், ”நாங்கள் அப்படிக் கோரவில்லை. ஆனால், நாங்கள் கொடுத்த ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்தால், தி.மு.க. அமைச்சரவை உடனடியாகத் தானாகவே பதவி விலகுவதுதான் நியாயம். நாகரிகமுள்ள எந்த அரசாங்கமும் அப்படித்தான் செய்யும்!” என்று மிகவும் சாதுரியமாகப் பதிலளித்தார்.

எம்.ஜி.ஆரின் அறிவுக்கூர்மையும், அரசியல் சாதுரியத்தையும் டெல்லிப் பத்திரிகையாளர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

எம்.ஜி.ஆர் அளித்த பட்டியிலிலுள்ள ஊழல்கள் ஒவ்வொன்றுக்கும் கைமாறிய தொகைகள், சம்ப்ந்தப்பட்ட நபர்கள் முதலிய அனைத்தும் ஆதாரப் பூரவமாய்க் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஊழல் பட்டியலைப் படித்துப் பார்த்த ஜனாதிபதி வி.வி.கிரி அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தார்.

அந்தப் புகார்ப் பட்டியலை முழுமையாக ஆராய்ந்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியும் அளித்தார்.

இவ்வாறு புரட்சித் தலைவரின் டெல்லிப் பயணம் வெற்றிகரமாய் முடிந்தது.

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும், இந்திரா காங்கிரசும் புரட்சித் தலைவரின் இந்த ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை உற்சாகமாக ஆதரித்தன; துணை நின்றன.