இமாலய வெற்றி
புரட்சித் தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோதே பிரதமர் இந்திராகாந்தி நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார். தற்காலிகமாகத் தமிழக முதல்வர் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்த நாவலர் நெடுஞ்செழியன் தமிழக சட்டமன்றத்தையும் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திப்பது என்று முடிவெடுத்தார்.
இந்திரா காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்தது. தி.மு.க. கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டன.
புரட்சித் தலைவர் தமிழகத்தில் இல்லாமலே அவரது இயக்கம் சந்தித்து முதல் தேர்தல் அது. புரட்சித் தலைவர் மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டார். புரட்சித் தலைவர் இல்லாத குறையைப் புரட்சித் தலைவி ஜெயல்லிதா ஈடு கட்டினார்.; தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்தார்.
அந்தத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சட்டமன்றத்தில் 132 இடங்களையும், நாடாளுமன்றத்தில் 12 இடங்களையும் பெற்று அமோக வெற்றி பெற்றது. ஆண்டிப் பட்டித் தொகுதியில் -6000 மைல்களுக்கு அப்பாலுள்ள மருத்துவமனையில் படுத்துகொண்டே – புரட்சித் தலைவர் மகத்தான வெற்றி பெற்றார். புரட்சித் தலைவர் 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதியன்று தாயகம் திரும்பினார். மூன்றாவது பிறவியெடுத்துத்திரும்பிய அந்த்ச் சரித்திர நாயகரைத் தமிழகமே திரண்டு வந்து வரவேற்றது!
1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதியன்று மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார், புரட்சித்தலைவர்.
அதற்குப் பிறகுதான் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம், ஆண்டு வருமானம் ஐயாயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு தினசரி 10 கிராம் இலவச பல்பொடி வழங்கும் திட்டம், இலவசக் காலணிகளை வழங்கும் திட்டம், கிராமந்தோறும் மாதம் ரூ.150 சம்பளத்தில் பாம்புக்கடி மருத்துவர் ஒருவரை நியமிக்கும் திட்டம் முதலியவற்றை அமல்படுத்திப் புதிதாக 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தினார்.
1986 ஆம் ஆண்டு செப்டம்பரில் உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கச் சென்ற புரட்சித் தலைவர் அதே மாத இறுதியில் தாயகம் திரும்பினார்; அக்டோபர் மாத்த்தில் ப.உ.ச. விடமிருந்து கட்சிப் பொதுச் செயலாளர் பதவியைத் தாமே மேற்கொண்டார்.
